Wednesday, May 27, 2015

கிராமம் காப்போம்

Image Source - http://www.trekearth.com/
செங்கழுநீர், சிறு அல்லியும்
குவிந்து மலர்ந்த தாமரையும்
கொஞ்சி நிற்கும் குளக்கரைகள்
நாரை, கொக்கு, நீர்ப்பறவை
நிறைந்து வாழும் நதிக்கரைகள்
காலம் தாண்டி காத்து நிற்கும்
காவல் தெய்வ சுடுசிலைகள்
அவை கொண்ட ஆனை பரி
சின்னஞ்சிறார் கூட்டம் போல்
சிரித்து நிற்கும் நெல்மணிகள்
கண்ணனவன் மேனி நிறம்
அது கொண்ட மேகத்திரள்
நீரால் செய்த சிறு மலராய்
பட்டுத் தெறிக்கும் அந்திச் சாரல்
ஓங்கி வளர்ந்த தென்னை பனைகள்
அவையூடே வளைந்தோடும்
ஒற்றையடி மண் பாதை
கண்களாலே காதல் செய்து
கால்களாலே மொழி பேசும்
அழகுக் கன்னி காளையர்கள்
வான் நோக்கி உவகை கொள்ளும்
வையம் காக்கும் உழவர்கள்
இவை யாவும் இசைந்து துலங்கும்
கிராமங்களைக் காத்திடுவோம்
இன்னும் சில காலமேனும்
உழவுத்தொழிலின் உயர்வுணர்ந்து
ஊர் திரும்பும் காலம் வந்தால்
அப்போதும் இவை வேண்டும்
நம் வாழ்வு நன்மையுற...
 


அஷோக் க்ருஷ்ணா