Tuesday, December 17, 2013

காதல் இல்லா ஊரில்…

Image Source - Google
நீ ஊரில் இல்லை என்றாலும்
இன்றும் நான் போய் வந்தேன்
நீ வசிக்கும் தெருப்பக்கம்
நேற்று மாலை மழைச்சாரலில்
பாதி அழிந்தும் அழியாமலும்
நேற்று காலை நீ இட்ட
அழகான மாக்கோலம்
சாத்த மறந்த ஜன்னல் வழியே
சலனம் காட்டும் திரைச்சீலை
நீ உலர வைத்து எடுக்க மறந்த
உன் வாசம் தோய்ந்த ஈர உடை
நீ நிதம் வைக்கும் வட்டில் சோற்றை
எதிர்பார்த்து வாசல் நிற்கும்
தெருவோர நாய்க்குட்டி
தூசு படிந்து தனிமையிலே
நிற்கும் உந்தன் மிதிவண்டி -
நான் மட்டும் இல்லையடி
நீ வரும் நாளை எதிர்நோக்கி,
உயிரான என் தோழி!

Wednesday, December 11, 2013

புத்தகத்துப் பூ

Image Source - Google
என்னுடனே இருப்பாயென
எவ்வளவோ எதிர்பார்த்து
மனத்தினூடே சேர்த்து வைத்தேன்
அளவில்லா ஆசைகளும்
சின்னச் சின்ன கனவுகளும்
புத்தகத்தில் புதைத்து வைத்த
வண்ணமான பூப்போல
 

நீ பிரிந்து யுகம் கடந்தும்
வண்ணம் மங்கி வாடினாலும்
வாசமெல்லாந் தொலைந்தாலும்
உருக்குலைந்த காகிதத்தில்
ஒட்டி நிற்கும் மிச்சம் போல்
செல்லரித்த இதயச்சுவற்றில்
ஆங்காங்கே தொக்கி நிற்கும்
அழகாக உன் நினைவுகள்!



அஷோக் கிருஷ்ணா