Sunday, February 5, 2012

தபால்காரர்!

வண்ணமய செய்தி தரும்
வையக விரிவு வலை!
இமைக்கும்போதே இடம் மாறும்
இலவச மின்னஞ்சல்கள்!
அஞ்சல் தலை தேவையில்லை
ஐந்து பைசா செலவுமில்லை!
குற்றேவல் செய்யும் குறுந்தகவல்கள்
தூரம் தொலைக்கும் தொலைபேசிகள்!

இத்தனையும் இருந்தபோதும்,
மாமா வீட்டு கிரகப்ப்ரவேசம்
பெரியப்பா வீட்டுக் கல்யாணம்
கருப்பு பூசிய காரியக் கடிதம்
கண் தெரியாத பாட்டிக்கு
தாத்தாவின் பென்ஷன் பணம்
தூரம் போன நண்பர்களின் பொங்கல் வாழ்த்து!
விட்டுப் போன காதலியின் கல்யாண அழைப்பு!

இதுபோலெல்லாம் உணர்ச்சிகளை சுமந்து வந்து
தினந்தோறும் காக்க வைத்து
வாரம்தோறும் வந்து போய்
அழ வைத்து சிரிக்க வைத்து
குடும்பத்தில் இல்லா குடும்பத்தவராய்
வருஷமிரு பண்டிகைக்கு
ஐந்து ருபாய் வாங்கிப்போய்
இன்று எங்கோ தொலைந்து போன
ஓட்டை சைக்கிள் காக்கி குல்லா
தபால்கார மாமாவை
எப்போதாவது நினைக்கும்போது
வலிக்கத்தான் செய்கிறது மனசு!

 

1 comment: