Image Source - Google |
மயக்கந்தரும் இனிய மணம்
அவ்வளவாய் கிடைப்பதில்லை!
சாரல் மழையில் கை நனைத்து
உடல் சிலிர்க்கும் குழந்தைகள் போல்
நெற்கதிர்கள் சிரிப்பதில்லை!
பெருமழையில் தலை குளித்து
புதுப்பெண் போல் பொலிந்து நிற்கும்
பச்சை மரங்கள் பல இல்லை!
சூடான தேநீர் தந்து
மழை நேரக் குளிர் போக்க
அம்மாவும் அருகில்லை!
ஜன்னலோரச் சுவர் சாய்ந்து
தமிழிலக்கியந்தனைப் படிக்கும்
அப்பாவும் இங்கில்லை!
கார்மேகத் துளி பிடித்து
கண் சிமிட்டி மேல் தெளிக்கும்
குறும்புக் காதல் இனி இல்லை!
மழை முடிந்த மறுகணமே
சுருதி கூட்டி இசை மீட்டும்
தவளைகளின் ஒலியுமில்லை!
காகிதத்துக் கப்பல் வீசி
களிப்பு கொண்டு விளையாடிட
நீர் பாயும் வாய்க்காலில்லை!
எவ்வளவு பெய்தாலும்
ஊர்ப்புறம் போல் ருசிப்பதில்லை
இந்த மாநகரத்து மாமழை!
No comments:
Post a Comment