Image Source - Google |
கணப்பொழுதின் ஸ்பரிசமில்லை
கண்ணிமைகள் சிமிட்டவில்லை
காதலேதும் கருத்திலில்லை
சிதறி வீழ்ந்த நாணயங்கள்
நீ தேடித் தந்த அந்த நொடி
எதிரெதிராய் அமர்ந்திருந்த
அழகான அத்தருணம்
ஏனென்றே தெரியாமல்
என் முகத்தை நீ பார்த்து
நான் பார்க்கும் அந்நொடியில்
சன்னலில் நீ முகம் புதைக்க
பார்வைகளின் தழுவலும்
பார்க்கும்போது நழுவலுமாய்
ஏதோ ஓர் பரவசத்தில்
களித்திருந்த அத்தருணம்
கடும்வாடை காற்றினிலே
உன் நடுக்கம் நான் கண்டு
என் ஜன்னல் சாத்தியதும்
நன்றி சொன்ன குறுஞ்சிரிப்பு
வரப்போகும் ஊர் கண்டு
வாசல் நோக்கி நான் நடக்க
இடையிருந்தவர் பின் தள்ளி
நீ பின் வந்த அந்தக் கணம்
மனதோர சலனம் கொன்று
முன் நோக்கி நான் நடக்க
ஒரு ஓரம் பாவி மனம்
உன் வரவு வேண்டி பின் நோக்க
அதிகாலை கூட்டத்திலும்
எனைப் பின் தொடர்ந்து வந்து
எனைத் தாண்டிப் போகாமல்
நீ இணை நடந்த அந்த நடை
பிரியும் கணம் அறிந்த பின்பு
மனதோரம் வலி உணர்ந்து
முகந்தனில் நகை கொணர்ந்து
நாம் பிரிந்து சென்ற அந்த நொடி
நமதிந்த ரயில் ஸ்நேஹம்
ரயிலோடு போகாமல்
ரயில் பாதை போல் நீள
உள்ளேதோ ஓர் விருப்பம்
இனி வாழ்க்கைப்பாதை தனில்
உனை மீண்டும் சந்திக்கையில்
உன்னோடு பகிர்ந்து கொள்ள
இந்நினைவுகளை உள்ளிருத்தி
எதிர்நோக்கி இருக்கின்றேன்
உன் பார்வைத் தழுவல்களை!
அஷோக் கிருஷ்ணா
No comments:
Post a Comment